Saturday, July 4, 2015

பின்னால் உதவும்…

அன்புடன் ஒரு நிமிடம் - 83.

ராகவ் அதை எதிர்பார்க்கவில்லை.
அத்தனை பாசமாக அன்னியோன்னியமான சகோதரர்களாச்சே கிஷோரும் மனோஜும்? திடீர்னு என்ன ஆச்சு? அதுவும் அவர் அந்தப்பக்கம் நகர்ந்த ஐந்து நிமிடத்துக்குள்?
கொஞ்ச முன்புதான் கிஷோரும் அவருமாக அவன் தம்பி வீட்டுக்கு வந்திருந்தார்கள்.
வாரம் ஒருமுறையாவது சந்திப்பது தான் என்றாலும் உற்சாகத்துக்கும் அரட்டைக்கும் கொஞ்சமும் குறைவிருக்காது.
அந்த அரட்டை இன்றைக்கு எங்கோ பிசகி..
ஏதோ ஒரு ஃபங்ஷன் பற்றி பேச்சு வந்ததில் இவன் ஏதோ சொல்ல அவன் ஏதோ சொல்ல…
“என்ன ஆச்சு நந்தினி?” இளையவன் மனைவியை இவர் வினவினார்.
“அது சித்தப்பா, நாங்க புது வீடு பால் காய்ச்சினப்போ உள்ளூரில இருக்கிற அவங்க மாமனாரை ஏன் வீட்டில போய் அழைக்கலேன்னு கேட்டாரு. இவரு அதுக்கு, நீ மட்டும் என்ன, உன் மச்சினி கல்யாணத்துக்கு இந்தப்பக்கம் யாருக்குமே பத்திரிகை வெக்கலேன்னு கத்தினாரு. சட்டுனு வார்த்தை தடிச்சு…”
“ஓ பெரிசாயிடுச்சு போலிருக்கே?”
“ஆமா. நீங்கதான் சொல்லி சமாதானப் படுத்தணும்.” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே கூச்சல் உச்ச ஸ்தாயிக்குப் போயிற்று.
இனி ஒண்ணும் செய்ய முடியாது போல இருக்கே?… நந்தினி கையைப் பிசைந்தாள்.
அந்த டேப் ரிகார்டரை எடு என்றார் ராகவ்.
புரியாமல் எடுத்து நீட்டினாள்.
வாங்கிக்கொண்டு அவசரமாக முன்பக்கம் வந்தார். சண்டை உச்சக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.
இவர் முன்பாக வைத்து ரிகார்ட் பட்டனை அமிழ்த்தினார். பார்த்து அவர்கள் விழிக்க,
'Go on,' என்பது போல அவர்களைப் பார்த்து சைகை காட்டினார்.
“என்ன மாமா இது?” என்றான் கிஷோர் கத்துவதை ஒரு செகண்ட் நிறுத்தி.
“அதுவா? சும்மா ரிகார்ட் பண்னிக்கறேன். நீங்க கண்டின்யூ பண்ணுங்க.”
“அதான் ஏன்கிறேன்.”
“பின்னால பிரயோஜனப்படும்.”
“பின்னாலயா?”
“ஆமா. ஒரு இருபது முப்பது வருஷம் கழிச்சு நீங்க எல்லாருமா உங்க பசங்களோட பேரப்பிள்ளைகளோட உட்கார்ந்து பேசிட்டிருக்கும்போது அப்ப எப்படியெல்லாம் சேர்ந்து சுத்துவோம், ஒருத்தரை ஒருத்தர் எப்படியெல்லாம் கலாய்ப்போம் அப்படீன்னு ஜாலியா பேசிட்டிருக்கும்போது, அன்னிக்கு எப்படியெல்லாம் அசட்டுத்தனமா சண்டை போட்டுக்குவோம்னு சொல்லி சிரிப்பீங்க இல்லையா, அப்ப இந்த ரிகார்டிங் உதவும்னு தோணிச்சு, அதான் கையிலெடுத்தேன். ம்,ம், நீங்க ப்ரொசீட் பண்ணுங்க.”
அப்புறம் எங்கே ப்ரொசீட் பண்றது? சகோதரர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
”சரி விடுடா அதை. வேறே பேசுவோம்!” என்றான் கிஷோர்.
மனோஜும் சிரித்தபடியே நந்தினி எடுத்து வந்த காபியை அவனுக்கு நீட்டினான்.
இவர் டேப் ரிகார்டரை ஆஃப் செய்தார் ஏமாற்றமின்றி.  
(’அமுதம்’ ஜூலை 2014 இதழில் வெளியானது.)
><><><
(படம் - நன்றி: கூகிள்)

5 comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!