Wednesday, November 15, 2017

மௌனம் புரிந்தது...

அன்புடன் ஒரு நிமிடம்... 119

”புறப்படுங்க. நீங்கதான் வந்து புத்தி சொல்லணும்.”
”யாருக்கு?”
”எங்கப்பாவுக்கு.”
சாத்வீகன் விழித்தார்.  ஒரு நிமிடம்தான்.  ”சரி.”
விளக்கினான் ஷ்யாம். நண்பரின் மகன். ”இன்னமும் அவர் காலத்திலேயே இருக்கிறார். பழம்பெரும் விஷயங்களைப் பேசிக்கொண்டு... இந்த தலைமுறையின் வேகமும் சரி, விவரமும் சரி அவர்கிட்டே இல்லே. எப்படி என்னத்தை பேசமுடியும் நான் அவரிடம்?  கொஞ்சமும் மாறவேமாட்டேங்கிறார். நீங்கதான்...”
”சொல்லிட்டேயில்லே?... புறப்படு.”

கிராமத்தில்...
போய் சேர்ந்த நேரம் நண்பகல்.
விறகு அடுப்பிலிருந்து கொதிக்கக் கொதிக்க மீன் குழம்பை எடுத்துவந்துஊற்றினாள் அவன் பாட்டி. இன்னொரு அடுப்பில் வத்தல் குழம்பு மணம் மூக்கை துளைக்க...
”சுடச்சுட சாப்பாடு! எப்படி சுவையா இருக்கு, பாத்திங்களா?” என்றான் சாத்வீகனிடம்
சாயங்காலம் வரை பேசிக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் அந்த டாபிக் பற்றி வாயைத் திறக்கலையே இவர். ஆச்சரியம் அவனுக்கு.
அது மட்டுமா? ”வெளியே கிளம்புவோம். ஊரை நல்லா சுத்திப் பாக்கணும்.” என்றார்
”சாப்பாடு நைட்டுக்கு?”
”வெளியே பார்த்துக்கறோம். சுடச்சுட பரோட்டா...”
சுற்றினார், சுற்றினார் அப்படி ஒரு அலைச்சல்.
திரும்பின நேரம் ஓட்டலும் திறந்திருக்கவில்லை. பசியும் உக்கிரம்.
வீட்டுக்கு வந்தால் மத்தியான சோறும் குழம்பு கொஞ்சமும். காலையில் மீந்துபோன இரண்டொரு ஆப்பமும் சாம்பாரும்தான் மீதி இருந்தது.
உற்சாகமின்றித்தான் உட்கொள்ள ஆரம்பித்தான். ஆனால் அந்த குழம்பில் பிசைந்த சோற்றின் ருசி. சாம்பார் ஊற்றிய ஆப்பத்தின் சுவை. ”அட சூப்பரா இருக்கே?” என்றான்.
’எப்படி, எப்படி இத்தனை ருசி..?” அவனே கேட்டுக் கொண்டு... சற்றே யோசித்து அவனே பதிலும் சொன்னான், “மத்தியானமே செய்ததுதான். ஆனால் அதனாலேயே அதில் உப்பும் புளியும் இன்னும் நல்லா ஊறி... மொத்த கலவையும் அலாதியாக  செட் ஆகி அருமையா இருக்கு. சுடச்சுட சாப்பிடும் புது சாப்பாட்டில் எப்படி ஒரு ருசி இருக்கோ, அது மாதிரி பழைய சாப்பாட்டின் சுவை இன்னொன்று....”
சொல்லிக் கொண்டேயிருந்தவன் சாத்வீகன் தன் பார்வையை செலுத்திய இடத்தைப் பார்த்தான். அவர் தாத்தாவை பார்த்துக் கொண்டிருந்தார்.
சாத்வீகனின் மெஸேஜ் புரிந்தது
மறு நாள் ரயிலில் திரும்ப வந்து கொனடிருந்தபோது சொன்னான்.
”யூ ஆர் ரைட். அந்தக்கால மனிதர்தான் என்றாலும் அவரிடம் அத்தனை வாழ்ந்த காலத்துக்கான பக்குவப்பட்ட பார்வை இருக்கு. அந்தப் பார்வை... அதுவும் அர்த்தமுள்ளதுதான். இந்தக்காலத்து இளைஞனான என் பார்வை மாதிரி அதுவும்!”
இவர் புன்னகைத்தார்.
><><
('அமுதம்’ ஜூலை 2015 இதழில் வெளியானது)

8 comments:

வெங்கட் நாகராஜ் said...

சொல்லிப் புரிய வைப்பதை விட, இப்படி புரிய வைப்பது நல்ல விஷயம். தொடரட்டும் அன்புடன் ஒரு நிமிடம்......

கோமதி அரசு said...

அருமையான விளக்கம்.

ரிஷபன் said...

புளியோதரையும் அப்படித்தான்.
காலையில் செய்ததை இரவு சாப்பிட இன்னமுமே சுவை
வாசிக்க வாசிக்க சுவை கூடும் உங்கள் எழுத்து போல

கே. பி. ஜனா... said...

வெங்கட் நாகராஜ் : நன்றி... மகிழ்ச்சி.

கே. பி. ஜனா... said...

கரந்தை ஜெயகுமார்: நன்றி சார்.

கே. பி. ஜனா... said...

ரிஷபன்: ஆஹா!

கே. பி. ஜனா... said...

கோமதி அரசு: நன்றி... மகிழ்ச்சி

ஸ்ரீராம். said...

சில விஷயங்களைச் சொல்லாமலேயே புரிய வைக்கலாம் என்று தெரிகிறது!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!