Saturday, March 24, 2018

அவள் - கவிதைகள்

 Image result for free images

471.
தொட்டுக் கொள்ள
உன்னைக் கேட்கிறது
தென்றல்.
><><

472.
ஒரு புறம் அவள்.
மறுபுறமும்
அவளே.
><><

473
அன்புக்கு இன்னொரு வடிவம் உண்டு,
அறிந்துகொண்டேன் உன்னைக் கண்டு.
><><

474
நான் உன்னை சந்தித்ததும்
நாள் ஞாயிற்றுக் கிழமையாகி விடுகிறது.
><><

475
மேகம் ஒதுங்கிக் கொள்ள
மின்னல் கண் சிமிட்டுகிறது
உன்னைப் பார்த்து.
><><

476
தெளிவு தன்னைத்
சரிபார்த்துக் கொள்கிறது
உன்னிடம்.
><><

477
காற்றில் நீந்துகிறேன்,
உன் காதலால்.
><><

478
புறப்பட்டு விட்டன பூக்கள்
புது இடம் தேடி... உன்
புன்னகையைப் பார்த்தபின்.
><><

479
உன்னுடன் நுழையும்போது
வளைந்து வரவேற்கின்றன
என்னையும்
தோட்டத்துச் செடிகள்.
><><

480
எதையும் மறக்க வைத்து விடுகிறாய்
எப்போதும் உன்னை நினைக்க வைத்து!
><><

Thursday, March 22, 2018

வேலைக்கு ஆவது...

அன்புடன் ஒரு நிமிடம் - 123

தியாகுவை அழைத்துக் கொண்டு அந்த இலக்கியக் கருத்தரங்கிற்கு செல்ல வந்திருந்தான் வினோத். 
”இதோ குளிச்சிட்டு வர்றேண்டா.”
”டேக் யுர் டைம். நிறைய நேரம் இருக்கு.”
இருந்தாலும் டைம் கொஞ்சம் நீண்டுதான் போனது. கவனித்தான் வினோத். அப்பவே குளிச்சு முடிச்சிட்ட மாதிரி இருந்ததே அப்புறமும் என்ன பின்கட்டை விட்டு வர இத்தனை நாழி? எட்டிப் பார்த்தான்.
பின்கட்டில் தலைக்கு மேல் உயரத்தில் அமைந்திருந்த நீளப் பலகணியின் கண்ணாடிகளில் ஒன்றைக் கழற்றிக் கொண்டிருந்தான் தியாகு. இவன் பார்த்துக் கொண்டிருக்க அவன் அந்த கண்ணாடியை சோப் தண்ணீர் தெளித்து பிரஷால் கழுவி துணியால் கிளீன் செய்தான். 
பலகணியில் வரிசைக்கு நான்காக பதினாறு இருந்தன. அவன் கழற்றியது ரெண்டாம் வரிசையில் நாலாவது. 
துடைத்து முடிந்ததும் அதை அதனிடத்தில் பொருத்தினான். உபகரணங்களை எடுத்து அதனிடத்தில் வைத்தான்.
கையைத்  துடைத்துக் கொண்டு இவனிடம், ”கிளம்பலாமா?” 
”பாக்கி கிளாஸ் எல்லாம்...?’
”இன்னிக்கு ஒண்ணுதான். நாளைக்கு ஒண்ணு. அப்படி...”
அவனை ஏற இறங்கப் பார்த்தான் வினோத். ”இதென்னடா இது. ஒரே ஒரு கிளாஸை மட்டும் மெனக்கெட்டு உட்கார்ந்து கழுவிக்கொண்டு?  ஒன்றை மட்டும் கழுவ இருபது நிமிஷம் ஆகுதுன்னா அதிலே, சோப், தண்ணி, பிரஷ், துணின்னு அதுக்கான எல்லா தேவைகளையும் எடுத்து வைக்க, கழற்ற, கை கழுவன்னு பத்து நிமிஷம் ஆகாதா? இந்தப் பத்து நிமிஷ நேரம்  தினம் அதிகப்படியா வேஸ்ட் ஆகறதுக்கு. ஒரேயடியா 16 கிளாஸையும் ஒரே நாளில் கிளீன் செய்யறதுன்னா அந்த நேரம் மிச்சம் இல்லையா? அதை யோசிக்கலியா? அப்படிச் செய்ய நினைக்கலியா?”
”அப்படித்தான் இதை செய்ய நினைச்சேன்.  நினைச்சு ஒண்ணரை வருஷம் ஆச்சு.” 
”ஓண்ணரை வருஷமா?”
”ஆமா. சுத்தமா வேலை நடக்கலே. நடக்காது. அதான் நம்ம மனசு. மொத்தமா ஒரு ரெண்டரை மணி நேரம் வேணும்னா அது நமக்கு சுலபமா கிடைக்காது. அதுவே ஒரு எக்ஸ்க்யூஸ் ஆகிடும் மனசுக்கு. மூடும் வராது. ஆக, ஒரு நாளும் அந்த வேலை நடக்காது. தினம் ஆகிற பத்து நிமிஷ வேஸ்டை நினைக்காதபோது... இப்ப பாரு, பாதி வேலை நடந்தாச்சு. எது பெட்டர்?”
“இதுவேதான்...” 
('அமுதம்' செப் 2015 இதழில் வெளியானது)

Wednesday, March 14, 2018

நல்லதா நாலு வார்த்தை.. 87

’எப்படியும் நீ சிந்தித்துத்தான் ஆக வேண்டும்,
ஏன் பெரிதாக சிந்திக்கக்கூடாது?’
- Donald Trump
('You have to think anyway, so why not think big?')' 

’நான் என்பது
நானும் என் சூழ்நிலைகளும்.’
- Jose Ortega y Gasset
('I am I plus my circumstances.') 

'உங்களைப் பற்றி மற்றவர்கள்
கொண்டிருக்கும் அபிப்பிராயம்
அவர்களின் பிரசினை,
உங்களுடையது அல்ல.'
- Elisabeth Kubler - Ross
('The opinion which other people have
of you is their problem, not yours.')
 

’அனைத்து விஷயங்களோடும்
பொறுமை காத்திடுங்கள், ஆனால்
ஆக முதலில் உங்களோடு!.’
- St. Francis de Sales
('Have patience with all things, but first of all with yourself.')
 

‘வாழ்க்கையை பெரிதாக ஏன்
எடுத்துக் கொள்ளவேண்டும்,
ஒருநாளும் அதிலிருந்து
உயிரோடு வெளியேறமுடியாதுதானே?'
- Elbert Hubbard
('Do not take life too seriously.
You will never get out of it alive.')
 

'வாழ்வதென்பது
தான் தொலைந்து போனதாக
ஒருவன் உணர்வது.'
- Jose Ortega y Gasset 
('To live is to feel oneself lost.')
 

‘வானவில் மீது ஆதிவாசிக்குரிய
மதிப்பான உணர்வு நமக்கில்லை,
எப்படி உருவாகிறது அது என்பதறிவதால்!
கிடைத்திருக்கிற அளவு இழந்திருக்கிறோம்
விஷயத்தின் உள்ளே மூக்கை நுழைத்து.’
- Mark Twain
('We have not the reverent feeling for the rainbow that
the savage has, because we know how it is made.
We have lost as much as we gained by prying into that matter.')
 

'மறுத்துப் பேசாமல் புன்னகைக்கும் ஒரு
மனிதனை ஏற்கவைப்பது இயலாது.'
- Muriel Spark
('It is impossible to persuade a man who does 
not disagree, but smiles.')
 

'ஓநாய்கள் இரைதேட அஞ்சும் பாதைகளினூடும்
ஓர் வழி கண்டு கொள்ளும் காதல்.'
- Gordon Byron
('Love will find a way through paths where wolves fear to prey.') 

’ஊகிக்க முடிகிறதாகவே வாழ்க்கை இருந்தால்
அதன்பின் அது வாழ்க்கையாக இருக்காது;
அதில் சுவையும் இருக்காது.’
- Eleanor Roosevet
('If life were predictable it would cease to be life,
and be without flavour.')
 

'சந்தர்ப்பமும் முன்னேற்பாடும்
சந்திக்கும் நேரமே அதிர்ஷ்டம்.'
- Pierre Trudeau
('Luck, that's when preparation and opportunity meet.') 

><><><><

Tuesday, March 13, 2018

அவள் - (கவிதைகள்)

461
அடம் பிடிக்கிறது தென்றல்,
நான்தான் இருப்பேன் உன்
மணப்பெண் தோழியாக என்று.
><><

462
தண்மையைப் பொழிவதில்
மழை என்றால்
அன்பைப் பொழிவதில் நீ.
><><

463.
காதல் என்றால்
நிஜத்தில் என்னவென்று எனக்குக்
கற்றுத்தர வந்தவள்.
><><

464
உன்னைப் பார்க்கவோ
விண்ணைவிட்டு
மண்ணிற்கு வந்தது மழை?
><><

465.
மனதில் பட்டிமன்றம்.
வென்றது ’நீ’யா
’உன் அன்பா’?
><><

466
சந்திரனில் போல
எடையிற்று மிதக்கும்
மந்திரம் புரிந்தாய்
என் மீது.
><><

467
வினோதமும் நூதனமுமாக நீ
வியப்பும் தவிப்புமாக நான்.
><><

468
உள்ளம் தொடாது
ஒரு தடவையும் போனதில்லை
உந்தன் புன்னகை.
><><

469
இருபத்து மூன்றை
நீ எடுத்துக் கொண்டு விட
மீதம் ஒரு மணியில் 
நாளைத் தள்ளுகிறேன்.
><><

470
இன்னும் அடங்கவில்லை பிரமிப்பு
நிஜமாகவே என் எதிரில்
நிற்பது நீதானா?
><><

Friday, March 9, 2018

பார்த்துப் பார்த்து.. (நிமிடக்கதை)

அன்புடன் ஒரு நிமிடம் - 122

”நீங்க வேணா பாருங்களேன்!” என்றாள் ஜனனி.
”அதெப்படி நடக்கும்?” வாசு ஆச்சரியத்துடன்.
”பரசுவிடம் கேட்டுட்டியா, எதுக்கும் ஒரு தடவைக்கு ரெண்டுதடவை சொல்லி சம்மதம் வாங்கிடு இப்பவே. இல்லேன்னா அங்கே வந்து கத்தப் போறான் அதெல்லாம் முடியாதுன்னு...”
”அதெல்லாம் என் வேலை, நான் பார்த்துக்கறேன்.”

வருக்கு சுத்தமாக நம்பிக்கையில்லை.  ஜனனிக்கு பாண்டிச்சேரி வரை போய் டாக்டரைப் பார்க்கணும். அவருக்கு நேரமில்லை. ”அதுக்கென்ன பரசு இருக்கானே, அவனை அழைத்துப் போகிறேன்,” என்றாள். 
”ஞாயிறு மட்டும்தான் அவனுக்கு... வருவானாக்கும்?”
”என்னோட மெடிகல் விஷயம்! எப்படி வராமல்?” என்றவள் உடனே அவனை மொபைலில் கூப்பிட்டு கேட்டாள்.
”போய் பார்த்துவிட்டு உடனே வந்திடலாம்டா..” 
”சரிம்மா.” 
அதற்கு சம்மதித்ததே பெரிசு. இப்ப என்னவென்றால் இவள் இன்னும் மூணு ப்ரோகிராமை அதனோடு அடுக்குகிறாள். அங்கேயிருக்கிற தன் சித்தி வீட்டுக்கு மகனோடு போகணுமாம்; ரொம்ப நாளா தேடிட்டிருந்த நாலு புத்தகங்களை வாங்கணுமாம்; பீச்சுக்குப் போய் கடலை ரசிக்கணுமாம். சரிதான் மொத்த பிளானும் கேன்சலாகப் போகுது! நான் வரலேன்னு  பிரதான விஷயத்திலிருந்தே ஒதுங்கப் போறான்!  அவர் பயந்தார்.

னால் அப்படி எதுவும் நடக்கவில்லை. கிளம்பினார்கள்.
ராத்திரி பத்து மணிபோல திரும்ப வந்தார்கள். பரசு முணுமுணுக்கவில்லை, அலுத்துக் கொள்ளவில்லை.  
”எப்படி ஜனனி, எப்படி அத்தனை வேலைக்கும் சம்மதிச்சு..போகிறபோதே திட்ட ஆரம்பித்திருப்பானே?” அவளிடம் தனியே கேட்டார்.
”நான் சொன்னால் தானே?”
ஆச்சரியமானார்.
”முதல்ல சொல்லவேயில்லையா? அது இன்னும் கஷ்டமாச்சே...” 
”அதனால தான் கஷ்டமாகலே. டாக்டர் விஷயம் முடிஞ்சதும் சொன்னேன், பக்கத்தில உன் பாட்டி வீடு இருக்கு, நம்மை அவங்க பார்த்து வருஷமாச்சு... போனால் சந்தோஷப்படுவாள் என்றேன். அதுக்கென்ன போகலாம்னு சொன்னான். பாட்டி வீடு இத்தனை ஜாலியா இருக்கும்னு அவன் நினைக்கலே. அங்கே அவனுக்கு போரடிக்கலே. அங்கிருந்து வந்தபோது எனக்கு ரொம்ப நாளா கிடைக்காமலிருந்த புக்ஸ் பத்தி சொன்னேன்.  இங்கே பார்க்க நினைக்கிறியான்னான்.  உனக்கு ஒண்ணும் கஷ்டமில்லையேன்னு கேட்டேன். பரவாயில்லே, ரொம்ப நாளா தேடறே இல்லையான்னு வந்தான். அப்புறம் புக்ஸ் வாங்கி முடிச்சபின் இவ்வளவுதூரம் வந்துட்டோம், பீச்சில் கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போகலாம்னு தோணுதுன்னேன்.  உனக்கு கஷ்டமில்லேன்னா... சரி வந்து தொலைன்னு சிரிச்சிட்டே அழைச்சிட்டுப் போனான்.” 
“நல்ல வழிதான். முதலிலேயே சொன்னால் அவனுக்கு மலைப்பா இருக்கும். பெரிய விஷயமா தெரியும். போய்விட்டு ஒவ்வொரு விஷயமா பார்த்துப் பார்த்து சொல்லும்போது அவனுக்கு கஷ்டமாத் தெரியாது....”
”அப்படி மட்டும் நினைச்சு இதை செய்யலே நான். அங்கே வந்து கேட்கிறப்ப அவன் சம்மதிக்கலேன்னா அதை ஏத்துக்கவும் தயாராக இருந்துகொண்டுதான் இப்படி செய்தேன். அதுதானே நியாயமும் கூட?”
“நிச்சயமா.'

><><><
( 'அமுதம்' ஆகஸ்ட் 2015 இதழில் வெளியானது )

Sunday, March 4, 2018

நல்லதா நாலு வார்த்தை.... 86


'எப்படியெல்லாம் நேசிக்கலாம் நான் உன்னை...
எங்கே, எண்ணிப்பார்க்கிறேன் வழிகளை கொஞ்சம்!'
- Elizabeth Barrett Browning
('How do I love thee? Let me count the ways.')


'அஞ்சாதே வருங்காலத்துக்காக.
அழாதே கடந்தகாலத்துக்காக.'
- Shelley
('Fear not for the future, weep not for the past.')


'சின்னைச் சின்ன வாய்ப்புகளில் குதித்தோடுவது
அந்தப் பெரிய ஒன்றிற்காகக் காத்திருப்பதைவிட
விரைவில் கொண்டுபோய்ச் சேர்க்கும் நம்மை.'
- Hugh Allen
('Jumping at several small opportunities may get us
there more quickly than waiting for one big one to come along.')
 


’தீர அவசியமெனில் தன் வழிமுறைகளை மட்டுமேயன்றி
இலக்கை ஒருபோதும் மாற்றாமல் நேராய்
இயங்கிச் செல்லும் அந்த மனிதனே
இவ்வுலகின் நம்பிக்கை.’
- Herbert Casson
('The hope of the world is the man who keeps right on,
changing his methods if he must, but not his purpose.')
 


'எங்கேயும் தவறில்லை,
எதுவும் தற்செயலில்லை.
அனைத்து நிகழ்வும்
அதிலிருந்து கற்றுக் கொள்ள
அளிக்கப்பட்ட வரங்களே.'
-Elisabeth Kubler-Ross
('There are no mistakes, no coincidences.
All events are blessings given to us to learn from.'
 


’வாழ்ந்திடத் தொடங்கு உடனே,
நாள் ஒவ்வொன்றையும் ஓர் தனி
வாழ்க்கையாகக் கணக்கிடு.’
- Sneca
(”Begin at once to live, and count each day as a separate life.’)
 


’எல்லாவற்றையும் நம்மால்
உடனே செய்துவிட முடியாது, ஆனால்
ஏதேனும் ஒன்றை உடனே செய்ய முடியும்.’
-Calvin Coolidge
('We cannot do everything at once, but we can
do something at once.')
 


'உன்னை நேசி முதலில், 
உள்ளதெல்லாம் வரிசையாய் வந்து சேரும்.
உலகில் எதையேனும் நடத்த வேண்டுமெனில்
உன்னை நீ நிஜமாய் நேசிக்க வேண்டும்.’
- Lucille Ball
('Love yourself first and everything else falls into line. You really have
to love yourself to get anything done in this world.')
 


’உழைக்கிறேன்,
உயிரோடிருக்க.’
- Bette Davis
('I work to stay alive.') 


'எல்லாவற்றையும் புரிந்துகொள்ளத் தேவையில்லை
என்பதைப் புரிந்துகொள்ள எனக்கு
எல்லா வாழ்க்கையும் ஆகிவிட்டிருக்கிறது.'
- Rene Coty
('It has taken me all my life to understand that
it is not necessary to understand everything.')

>>><<<

Saturday, March 3, 2018

அவள் - (கவிதைகள்)

451
நின்னை நோக்கிட
காலடியில் நழுவுகிறது
காலம்.

452
பிரசன்னமானாய் நீ.
மாயமானேன் நான்.

453.
உன் அழகை ஒரு
கவிதையாக எழுதும்போது
அந்த அழகை இன்னும்
அதிகமாக ரசிக்கிறேன்.

454.
நீயும் உன்
நினைவுகளும்!
நிறைந்தது என்னுலகம்!

455.
காண்பதெல்லாம் அழகாய்
உணர்வதெல்லாம் அன்பாய்
நீயிருக்க உன் முன் நான்
வெட்கிப் போகிறேன்.

456
இதயத்தில் விழுந்த உன்
அன்பு மழையை விடவா
இந்த மழை என்னை
நனைத்துவிடப் போகிறது!

457
தனிமை விடை பெற்றது.
இனிமை இடம் பெற்றது.

458.
வினாடி நேரமே திறந்தேன் மனதை,
விரைந்து குடியேறிவிட்டாய்.

459
படம் பிடித்தேன்
மழையை மனதில்;
நீ வரா நாட்களில்
நினைத்துப் பார்த்திட.

460
உன்னைச் சுற்றிப் பொழியும் மழை என்
அன்பைச் சொல்வது கேட்கிறதா?

><><